சிவகிரி:
சிவகிரியில் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் மண்டபம் தெருவில் அமைந்துள்ள இலக்கனேஸ்வரர் காந்தேஸ்வரி சமேதரர் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு 2-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும், அம்மனுக்கு பால், தயிர், இளநீர், நெய் சந்தனம் உள்பட 18 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாள் இரவும் காந்தேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு சிம்ம வாகனம், மீனாட்சியம்மன் அலங்காரம், தபசு காட்சி கோலம், போன்ற வாகனங்களில் அமர்ந்து முக்கிய வீதிகளில் உலா காட்சி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பூக்குழி திருவிழாவையொட்டி திடல் முன்பாக அக்னி வளர்க்கப்பட்டது. மாலையில் சப்பரத்துக்கு முன்பாக பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷங்களுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர். சப்பரம் பூக்குழி திடலை வந்து சேர்ந்தவுடன் பூக்குழி இறங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.