கோவில் திருவிழா: வான வெடிக்கையின் போது வெடி விபத்து - சிறுவன் பலி 3 பேர் காயம்...!

பெரம்பலூர் அருகே கோவில் திருவிழாவின் போது நடைபெற்ற வான வெடிக்கையின் ஏற்பட்டவிபத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையல் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-09-09 12:44 GMT

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது வானவெடி மற்றும் அதிர்வேட்டு வெடிகள் வெடிக்கப்பட்டது. அப்போது வெடிக்கப்பட்ட வெடிகளில் ஒன்று சிதறி அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் புகுந்து வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ராஜ்குமார் என்பவரது மகன் லலித் கிஷோர் (வயது 9), புனிதா(32), சுரேஷ் (36), பிரியா (21) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ், பிரியா, புனிதா ஆகிய 3 பேருக்கும் லேசான காயம் என்பதால் அங்கேயே டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிறுவன் லலித் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

அங்கு கொண்டு வந்த சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் லலித் கிஷோர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வான வெடிக்கை நடத்திய நீலகண்டன் (27) மணிகண்டன் (34) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்