கம்பம் கவுமாரியம்மன் கோவில் திருவிழா; அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
கம்பம் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அலகு குத்தி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கம்பத்தில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 18-ந்தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொறு சமுதாயத்தினர் மண்டகப்படி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பொங்கல் விழா மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மேலும் அங்கபிரதட்சணம், அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
மேலும் விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடைபெற்றது. இதில், கம்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் இன்று (புதன்கிழமை) பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.