திருமலைக்கேணியில் சூரசம்ஹாரம்; சூரர்களை வதம் செய்த முருகப்பெருமான்

திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் சூரர்களை வேல் கொண்டு முருகப்பெருமான் வதம் செய்தார்.

Update: 2022-10-30 16:19 GMT

திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் சூரர்களை வேல் கொண்டு முருகப்பெருமான் வதம் செய்தார்.

கந்தசஷ்டி விழா

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணியில் பிரசித்திபெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கந்தசஷ்டி விழா, கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்தடன் தொடங்கியது.

இதையடுத்து ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது முருகப்பெருமான் சிவபூஜை, முருகப்பெருமான் சிவ உபதேசம், அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல், வேல் வாங்கும் திருக்காட்சி ஆகிய அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சூரசம்ஹாரம்

இந்தநிலையில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள கிரிவீதியில் வலம்வந்தார். அப்போது சூரர்களான தாரகாசூரன், சிங்கமுகாசூரன், பானுகோபன் ஆகியோரை முருகப்பெருமான் தனது சக்திவேல் கொண்டு வதம் செய்தார்.

இதில், திண்டுக்கல், நத்தம், செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க வழிபாடு செய்தனர்.

தீர்த்தவாரி

பின்னர் முருகப்பெருமானின் கோபம் தணிக்க தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவிலில் கொடி இறக்கப்பட்டது. மேலும் முருகப்பெருமான் கோவிலுக்குள் வலம்வந்தார். அப்போது அவருக்கு சாந்திஹோமம் நடைபெற்றது. பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.

கந்தசஷ்டி விழாவில் இன்று (திங்கட்கிழமை) முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்