பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா; 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடக்கம்

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.;

Update:2022-10-15 22:45 IST

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

கந்தசஷ்டி திருவிழா

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா 7 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நண்பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கல்பபூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் மற்றும் நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது. அதன்பின்னர் சஷ்டி விரதம் தொடங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலைக்கோவில் நடை சாத்தப்படுகிறது.

சூரசம்ஹாரம்

பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் பாதவிநாயகர் கோவிலுக்கு வருகிறார். பின்னர் திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுதசுவாமியிடம் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னர் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் உள்ள ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது.

திருக்கல்யாணம்

திருவிழாவின் 7-ம் நாளான 31-ந்தேதி மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. முன்னதாக திருக்கல்யாண மண்டபத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்