பெரியகுளம் தென்கரை கவுமாரியம்மன் கோவிலில் ஆனி திருவிழா; கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது
பெரியகுளம் தென்கரையில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் ஆனி திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
பெரியகுளம் தென்கரையில் பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆனி திருவிழா நடைபெறவில்லை.
இந்தநிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று இரவு கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதையொட்டி வடகரையில் உள்ள பரம்பரை பூசாரி வீட்டில் இருந்து கம்பம் மற்றும் கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
மேலும் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் கம்பம் நடப்பட்டு, ஆனி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.