பொதுஆவுடையார் கோவிலில் பகலில் நடை திறந்து வழிபாடு
தைப்பொங்கல் திருநாளையொட்டி பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் பகலில் நடைதிறந்து வழிபாடு நடந்தது.
கரம்பயம்;
தைப்பொங்கல் திருநாளையொட்டி பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் பகலில் நடைதிறந்து வழிபாடு நடந்தது.
பொதுஆவுடையார் கோவில்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரக்கலக்கோட்டை ஊராட்சியில் மத்தியபுரீஸ்வரர் என்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு மட்டுமே நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும். பகலில் நடை திறக்கப்படாது. தைப்பொங்கல் நாளில் மட்டும் பொதுஆவுடையார் சன்னதி நடை திறக்கப்பட்டு அனைத்து அலங்காரங்கள் செய்து பொதுஆவுடையாருக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்படும்.
ஆயிரக்கணக்கான பக்தா்கள்
இந்த ஆண்டு பொங்கல் திருநாளில் பகலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பகலில் நடை திறக்கப்பட்டதையொட்டி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வந்த நெல், கரும்பு, நவதானியங்கள், இளநீர், தேங்காய், ஆடு, கோழி அனைத்தையும் அன்று மாலை 6 மணிக்கு ஏலம் விடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை தஞ்சை உதவி ஆணையர் நாகையா தலைமையில் கோவில் செயல் அலுவலர் வடிவேல்துரை, பரம்பரை அறங்காவலர்கள் ராதா, முரளிதரன், பரக்கலக்கோட்டை ஊராட்சி தலைவர் விநாயகம், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.