நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Update: 2023-05-07 18:45 GMT

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

நெல்லுக்கடை மாரியம்மன்

நாகையில் புகழ்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை பிரம்மோற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. இரவு பூச்செரிதல் விழா நடந்தது.

இதை தொடர்ந்து 29-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும், 30-ந் தேதி காலை மயில்வாகனத்திலும், இரவு வேணுகோபாலன் அலங்காரத்திலும் வீதி உலா நடந்தது. தொடர்ந்து பல்வேறு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடந்தது.

தேரோட்டம்

கடந்த 3-ந் தேதி இரவு வசந்த உற்சவம் நடந்தது. இதில் அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். 5-ந் தேதி இரவு ரிஷபவாகன காட்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகரசபை தலைவர் மாரிமுத்து ஆகியோர் கல்நது கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தேரில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் 3 சிறிய தேர்கள் நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

செடில் உற்சவம்

அதைத்தொடர்ந்து காத்தவராய சாமி செடில் மரத்தில் ஏறும் உற்சவம் நடந்தது. அப்போது பக்தர்கள் தங்களது குழந்தைகளை 30 அடி உயரம் கொண்ட செடில் மரத்தில் ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

இன்று (திங்கட்கிழமை) காலை தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியுடன் கொடி இறக்கப்படுகிறது. 10-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 12-ந் தேதி இரவு புஷ்பபல்லாக்கு நிகழ்ச்சியும், 14-ந் தேதி உதிரவாய் துடைப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்