எட்டுக்குடி முருகன் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா தேரோட்டம்
எட்டுக்குடி முருகன் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ேதரை வடம்பிடித்து இழுத்தனர்.
எட்டுக்குடி முருகன் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ேதரை வடம்பிடித்து இழுத்தனர்.
எட்டுக்குடி முருகன் கோவில்
நாகை மாவட்டம் எட்டுக்குடியில் முருகன் கோவில் உள்ளது. ஆதிப்படை வீடு என்று இக்கோவில் அழைக்கப்படுகிறது. பதிணெண் சித்தர்களுள் ஒருவரான வான்மீகி சித்தர் ஜீவசமாதி அடைந்த 'பள்ளிப்படை ஸ்தலம்' என்ற சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு.
இங்கு தல விருட்சமாக வன்னி மரமும், தீர்த்தமாக சரவணப் பொய்கையும் திகழ்கிறது. கந்த புராணத்தின்படி இங்கு அருள்பாலிக்கும் முருகன் சூரபத்மனை அழிப்பதற்கு முன்பாக தேவேந்திரனாகிய மயில் மீது ஏறி அமர்ந்திருந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சித்ரா பவுர்ணமி திருவிழா
பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்ம வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கும் சிலைகள் உள்ளன. சூர சம்ஹாரம் செய்வதற்கு முருகப்பெருமான் இங்கிருந்து புறப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.
இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மயில்வாகனம், வெள்ளி ரிஷபவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது.
தேரோட்டம்
அதனைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு வீதிகளில் வலம் வந்த தேர் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு, உதவிஆணையர் ராணி, திருக்குவளை தாசில்தார் ராஜ்குமார், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், செயல் அலுவலர் கவியரசு, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தாமஸ் ஆல்வா எடிசன், மலர்வண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) பால் காவடி, ரத காவடி மற்றும் அபிஷேகம் நடக்கிறது.