கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு பகுதியில் உள்ள காலபைரவர் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி 32 கிராம மக்கள் பங்கேற்ற திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம், மூலவருக்கு ருத்ராபிஷேகம், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. இரவு 10 மணி முதல் காலை வரை சேவாட்டமும், இரவு 12 மணிக்கு சாமி உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் நடைபெற்றன.
நேற்று காலை 8 மணிக்கு பைரவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. பின்னர் தங்ககவச அலங்காரத்தில் கால பைரவர் அருள்பாலித்தார். தொடர்ந்து காலபைரவர் உற்சவ ஊர்வலம் நடந்தது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் 32 கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.