மோகனூரில் மாரியம்மனுக்கு கூழ் படைத்து பூஜை

Update: 2023-04-15 18:45 GMT

மோகனூர்:

மோகனூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் குண்ட திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தெதி இரவு கம்பம் நடப்பட்டு, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து, கோவில் முன்பு நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபாடு நடத்தினர். விழாவின் ஒரு பகுதியாக நேற்று மாலை மாரியம்மனுக்கு கலயங்களில் கூழ் படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் மோகனூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடிசோறு பூஜை நடக்கிறது. வருகிற 24-ந் தேதி அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் அன்று பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 25-ந் தேதி காலை கிடா வெட்டுதலும், இரவு மாவிளக்கு பூஜையும், இதைத்தொடர்ந்து கம்பத்தை காவிரி ஆற்றில் விடும் நிகழ்வும் நடைபெறும். 26-ந் தேதி மாலை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்