நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டப்பட்டி கிராமத்தில் மகாகணபதி, பாலமுருகன், விசாலாட்சி காசிவிஸ்வநாதர் கோவில், பல லட்ச ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. பின்னர் மூலவர் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பின்னர் காலை 9 மணிக்கு மேல் மகாகணபதி, பாலமுருகன், விசாலாட்சி காசிவிஸ்வநாதர் கோவில் விமான கோபுர கலசங்கள் மற்றும் பரிவார, மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஒட்டப்பட்டி, வள்ளுவர் நகர், பெருமாள் கோவில்மேடு, தடங்கம், எர்ரப்பட்டி, தேங்காமரத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.