மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-04-05 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காரிமங்கலம்

காரிமங்கலம் அடுத்த மொரசுப்பட்டி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. விழாவில் நேற்று காலை 10 மணிக்கு மேல் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சிறியது முதல் பெரிய அளவிலான அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல் சென்னம்பட்டி முருகன் கோவில், உச்சம்பட்டி முருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சாமி தேரில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி, சாமி திருக்கல்யாணம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர்

மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. நேற்று காலையில் சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் முன்னதாக சுப்பிரமணிய சாமி வள்ளி, தெய்வானையுடன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கம்பைநல்லூர் செங்குந்தர் தெருவில் உள்ள சிவசுப்பிரமணியர் சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவில் புற்று மண் எடுத்தல், கொடியேற்றுதல், சாமி திருவீதி உலா வருதல், பால்குடம், இடும்பன் கும்ப பூஜை மற்றும் சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மயில் வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. நேற்று காலை விநாயகர் ரத திருவீதி உலா நடந்தது. விநாயகர் சாமி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதை தொடர்ந்து இரவு உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் சிவசுப்பிரமணியர் ரத ஆரோகனமும். சாமி தேர் திருவிழாவும் நடைபெற்ற உள்ளது.

மேலும் செய்திகள்