இன்று ஜெயந்தி விழா: தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் கொடியேற்றம்

Update: 2022-12-14 18:45 GMT

நல்லம்பள்ளி:

ஜெயந்தி விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் கொடியேற்றப்பட்டது.

தட்சிணகாசி காலபைரவர் கோவில்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் காலபைரவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்தநிலையில் காலபைரவர் ஜெயந்தி இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று காலை கோவில் வளாகத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மேள தாளங்கள் முழங்க, பால், சந்தனம், பன்னீர் மற்றும் பல்வேறு திரவியங்களால் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

கொடியேற்றம்

தொடர்ந்து கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை தட்சிணகாசி காலபைரவருக்கு நறுமண பொருட்கள், பல்வேறு திரவியங்கள் மற்றும் பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

தொடர்ந்து பல்வேறு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனைகளும் நடக்கிறது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், குருக்கள் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்