திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2022-10-15 19:22 GMT


திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

சிறப்பு வழிபாடு

திருப்பூரில் உள்ள பெரும்பாலான கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல் வீரராகவப்பெருமாள் கோவிலிலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜையுடன் வழிபாடு தொடங்கியது. பின்னர் கால சாந்தி பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதையடுத்து காலை 6 மணிக்கு தேரடி வீதி வழியாக திருவீதி உலா நடந்தது. இதில் வீரராகவப்பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவில் கொடி மரத்தின் அருகில் வைக்கப்பட்ட வீரராகவ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதிய வேளை வரை இந்த தரிசனம் தொடர்ந்த நிலையில் மாலை 5 மணியிலிருந்து மாலை நேர சிறப்பு பூஜைகள் தொடங்கியது. பின்னர் இரவு மகா தீபாராதனை மற்றும் ஏகாந்த சேவையுடன் பூைஜகள் நிறைவடைந்தது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு 'கோவிந்தா, கோவிந்தா' என்ற கோஷத்துடன் பக்தி பெருக்குடன் வழிபட்டனர்.

பக்தர்கள் கூட்டம்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வீரராகவப்பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்த நிலையில் நேற்று கடைசி சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலையில் இருந்தே கோவிலின் வெளியேயும், உள்ளேயும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவில் காலை முதல் இரவு வரை திருவிழா கோலம் பூண்டது. இதேபோல், கோவிலின் வெளியே அமர்ந்திருந்த தாசர்களுக்கு பக்தர்கள் அரிசி, காய்கறிகள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கியும் வழிபாடு நடத்தினர். மாலையில் கோவிலில் நடந்த பக்தி இன்னிசை நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். இதேபோல் காலை முதல் இரவு வரைக்கும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரதோஷ வழிபாட்டுக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பிரதோஷ வழிபாட்டுக்குழு

அன்னதான நிகழ்ச்சியில் பிரதோஷ வழிபாட்டுக்குழுவின் தலைவர் சுந்தரராஜ், செயலாளர் மணி மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணியம், மனோகரன், மணிக்கண்ணன், சின்னதம்பி, மீனாட்சி ராஜா, தமிழன் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு குறித்து நிர்வாகிகள் கூறியதாவது, தற்போது இந்த கோவிலில் 24-வது ஆண்டு அன்னதானம் நடந்துள்ளது. இந்த மாதத்தில் 4 சனிக்கிழமைகளிலும் கோவில் வழிபாட்டிற்கு தேவையான ஏற்பாடுகள் பிரதோஷ வழிபாட்டுக்குழு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பெருமாள் கோவிலில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், ஹயக்கிரீவர் பூஜையும் நடத்தி வருகிறோம். மேலும், ஈஸ்வரன் கோவிலில் கடந்த 30 வருடங்களாக ஆண்டின் அனைத்து பிரதோஷ நாட்களிலும் பூஜைக்கான ஏற்பாடு மற்றும் அன்னதானம் செய்து வருகிறோம். இதேபோல், 16 வருடங்களாக கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, 30 வருடங்களாக ஆருத்ரா தரிசன விழா, சிவராத்திரி பூஜை என பல்வேறு வழிபாட்டிற்கு தேவையான ஏற்பாடுகளும் பிரதோஷ வழிபாட்டுக்குழு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்