ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆடி கிருத்திகையையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி கிருத்திகை
தர்மபுரியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகை விழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. விழாவையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி நகரில் புகழ்பெற்ற குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தங்ககவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணி சாமி கோவில், கடைவீதி சுப்பிரமணி சாமி கோவில், கோட்டை சண்முகநாதர் சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி, லளிகம்
இதேபோன்று இண்டூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பாப்பாரப்பட்டி புதிய மற்றும் பழைய சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், லலிகம் தண்டாயுதபாணி சாமி கோவில், பள்ளிப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில், கம்பைநல்லூர் சிவசுப்பிரமணியசாமி கோவில், அடிலம் முருகன் கோவில் என மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் உள்ள காவடி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி கங்கை பூஜை, மூலவர் மற்றும் காவடிக்கு சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சியும், மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் லளிகம், குமாரசாமிபேட்டை, சுங்கரஅள்ளி, பாப்பாரப்பட்டி, கம்பைநல்லூர் பிடமனேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.