காட்டு யானையை சீண்டிய வாலிபர்கள்

முதுமலை சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையை 2 வாலிபர்கள் சீண்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2023-09-05 20:45 GMT

கூடலூர்

முதுமலை சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையை 2 வாலிபர்கள் சீண்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் எடுத்தனர்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்பட வனவிலங்குகள் உள்ளன. இதனால் அவை சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு முதுமலை வனத்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது தொரப்பள்ளி-கார்குடி இடையே பிதிருல்லா பாலம் அருகே சாலையோரம் காட்டு யானை புற்களை தும்பிக்கையால் பறித்து தின்று கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் கூடலூர் பகுதியில் இருந்து முதுமலைக்கு வந்து கொண்டிருந்த 2 வாலிபர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். பின்னர் அவர்கள் சாலையோரம் நின்ற யானையை செல்போனில் வீடியோ எடுத்த படி சீண்டினர். தொடர்ந்து காட்டு யானையின் அருகே சென்று சத்தம் போட்டவாறு இருந்தனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த யானை, வாலிபர்களை துரத்தியது.

வாலிபர்களுக்கு அபராதம்

பின்னர் வாலிபர்கள் அங்கிருந்து சற்று தூரம் தப்பி ஓடினர். இதனிடையே அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சாதிக், ஷாகீல் என்பதும், காட்டு யானைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புகைப்படம் எடுத்து சீண்டியதும் தெரியவந்தது.

தொடர்ந்து 2 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து காட்டு யானையை வாலிபர்கள் சீண்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்