காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்கள்

தளவாபாளையம் அருகே காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது.

Update: 2022-08-15 19:50 GMT

காவிரி ஆற்றில் குளித்தனர்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே குளத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் திவாகர் (வயது 25). இவர் வாங்கல் அருகே கடம்பங்குறிச்சியில் உள்ள தனது குலதெய்வமான பவுளியம்மன் கோவிலில் கிடா விருந்து வைத்திருந்தார். இதில் திவாகரின் நண்பர்களான கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் விஷ்ணு (25), ஒண்டிபுதூரை சேர்ந்த ஆதர்ஷ் (25), கோவையை சேர்ந்த சங்கர், நவீன்குமார், அஜித் ஆகிய 5 பேர் கலந்து கொள்ள கடம்பன்குறிச்சி வந்தனர்.இவர்கள் நேற்று மதியம் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். காவிரி ஆற்றில் தற்போது அதிகப்படியான தண்ணீர் செல்லும் நிலையில் ஆழமான பகுதியில் முதலில் இறங்கிய ஆதர்ஷை தண்ணீர் இழுத்து சென்றது. அதைக்கண்ட விஷ்ணு அவரை காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கியபோது அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவிரி ஆற்றுக்குள் இறங்கி மாயமான 2 பேரையும் தேடினர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை மீண்டும் தேடும் பணியை தொடங்க உள்ளனர். இதுகுறித்து வாங்கல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்