நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி இழுத்து சென்ற வாலிபர்கள்

குன்னூரில் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி இழுத்து சென்ற வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-10 15:42 GMT

ஊட்டி, 

நீலகிரி மலை மாவட்டம் என்பதால், கொண்டை ஊசி வளைவுகள், செங்குத்தான சாலைகள் உள்ளன. இதனால் சமவெளியை விட விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், மிதமான வேகத்தில் செல்லவும், போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் குன்னூர் ஆரஞ்சு குரோ சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் 2 பேர், மற்றொரு மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி இழுத்து சென்றனர். ஒருவர் கயிற்றை பிடித்த படி பின்பக்கம் திரும்பி அமர்ந்து இருந்தார். அப்போது சாலையில் பிற வாகனங்களும் சென்றன. மேலும் அவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்து சென்றனர். மேலும் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் வைரலானது. மோட்டார் சைக்கிளை இழுத்து செல்லும் போது பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மலைப்பாதையில் இவ்வாறு பயணம் மேற்கொள்வது அவர்களுக்கு மட்டுமல்ல, சாலையில் செல்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, இவ்வாறு செல்லும் வாலிபர்களை பிடித்து பைக் ரேஸில் ஈடுபடும் வாலிபர்களிடம் வாங்குவது போல் நன்னடத்தை பத்திரம் வாங்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்