தனியார் மதுபாரில் வாலிபர் குத்திக்கொலை

ஒட்டன்சத்திரத்தில் தனியார் மதுபான பாரில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-05-28 19:00 GMT

மதுபாரில் தகராறு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் அருகே தனியார் மதுபார் உள்ளது. இங்கு நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் சிலர் மது குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்த புலிக்குத்தி பகுதியை சேர்ந்த முருகேஸ்வரன் (வயது 36) என்பவரும், அந்த மதுபாருக்கு சென்றார். அங்கு ஒரு மேஜை அருகே இருந்த நாற்காலியில் அவர் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அங்கு வந்த ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும், முருகேஸ்வரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதை பார்த்த சிலர் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

குத்திக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், முருகேஸ்வரனின் கழுத்தில் குத்தினார். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேற, வலியால் துடித்த முருகேஸ்வரன் கீழே சரிந்தார். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

முருகேஸ்வரன் குத்தப்பட்டதை அறிந்த மதுபிரியர்கள், அலறியடித்து கொண்டு மதுபாரை விட்டு வெளியே ஓடினர். இதற்கிடையே முருகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் முருகேஸ்வரனை குத்தி கொலை செய்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர். தனியார் மதுபாரில் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டன்சத்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்