மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி - மற்றொருவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

Update: 2022-11-23 08:08 GMT

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரா (வயது 43). திருத்தணி அடுத்த அருங்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருவள்ளூரில் இருந்து அருங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் சென்றுகொண்டிருந்தனர். வீரா மோட்டார் சைக்கிளை ஓட்ட ரமேஷ் பின்னால் அமர்ந்து சென்றார். அவர்கள் பட்டரை பெரும்புதூர் முருகன் கோவில் அருகே சாலையின் வளைவில் திரும்பிய போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி 2 பேரும் கீழே விழுந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் தாலுக்கா சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த வீரா திருவள்ளூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்