குரோம்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம்

குரோம்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2023-08-20 13:16 GMT

சென்னை கோட்டூர்புரம், மண்டபம் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 25). கார் டிரைவரான இவர், அதிக குடிபோதைக்கு அடிமையாகி வீட்டில் தகராறு செய்து வந்தார். இதனால் அவரை கடந்த 15-ந் தேதி குரோம்பேட்டை, அர்க்கீஸ்வரர் காலனியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.அங்கு ஜானகிராமனுக்கு மனநிலை மாற்றம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜானகிராமனின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வருமாறும், மறுவாழ்வு மையத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. இதையடுத்து ஜானகிராமனின் உறவினர்கள் நேற்று காலை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு ஜானகிராமன் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் போதை மறுவாழ்வு மையத்தின் மீது குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போதை மறுவாழ்வு மையத்தை சேர்ந்த அந்தோணி பெலிக்ஸ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்