மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-04 18:34 GMT

கோவில் திருவிழா

இலுப்பூர் அருகே உள்ள சித்தகுடிப்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அருண்பாண்டி (வயது 22). இவர் கடந்த 2-ந் தேதி இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டியில் தனது தாத்தா சின்னையா வீட்டிற்கு சென்றுள்ளார். 3-ந் தேதி இருந்திராப்பட்டியில் நடந்த முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு விட்டு பின்னர் இலுப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது திம்மியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பீதியடைந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றார்.

பிரேத பரிசோதனை

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அருண்பாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருண்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகன டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்