2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
நாமக்கல்லில் நள்ளிரவில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் பலி
நாமக்கல் நகரில் திருச்செங்கோடு சாலையில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த பேரையூர் பகுதியை சேர்ந்த முக்கராஜ் மகன் அய்யனார் (வயது 27) என்பவர் கடந்த ஒரு ஆண்டாக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நாமக்கல் ராமபுரம்புதூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியில், 2-வது மாடியில் அறை எடுத்து தங்கி வசித்து வந்தார்.
இந்தநிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு, நள்ளிரவில் தான் தங்கி இருக்கும் அறைக்கு அய்யனார் வந்தார். பின்னர் அவர் 2-ம் தளத்தின் வெளியே கைப்பிடி சுவரில் சாய்ந்து கொண்டு, செல்போன் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் திடீரென கால்தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இது குறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2-வது மாடியில் இருந்து தவறிவிழுந்து வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.