வாகனம் மோதி வாலிபர் பலி
வந்தவாசி அருகே வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வந்தவாசி
வந்தவாசி அருகே வழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணா (வயது 31). இவரது மனைவி தாட்சாயினி, மக்கள் நல பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பவஸ்ரீ (3) என்ற மகள் உள்ளார்.
கடந்த 12-ந் தேதி பணி நிமித்தமாக தாட்சாயினி வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றார். மாலை அவரை அழைத்து வருவதற்காக குணா மோட்டார்சைக்கிளில் சென்றார்.
ஆனால் தாட்சாயினி பஸ்சில் ஊருக்கு சென்று விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் கடைசிகுளம் சுகநதி பாலம் அருகில் செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குணாவின் தந்தை பெரியசாமி வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.