குடிபோதையில் ஓட்டியதாக மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தற்கொலை
குடிபோதையில் ஓட்டியதாக மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை,
சென்னை எம்.ஜி.ஆர்.நகர், கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நிசாந்த் (வயது 24). தேனாம்பேட்டையில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அப்ரினி. இவர்கள் இருவரும் கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் காதல் திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு நிசாந்த், கே.கே.நகர் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் நிசாந்த், தனது மோட்டார் சைக்கிளில் ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் வழியாக தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் பறிமுதல்
அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த எம்ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலைய ஏட்டு பார்த்திபன், போலீஸ்காரர் கார்த்திக் ஆகியோர் நிசாந்தை நிறுத்தி விசாரித்தனர்.
அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக நிசாந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரது மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அபராத தொகை ரூ.10 ஆயிரம் செலுத்திவிட்டு எடுத்துச்செல்லும்படி கூறினர்.
கணவன்-மனைவி தகராறு
இதையடுத்து நிசாந்த் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றுவிட்டார். நள்ளிரவு வீட்டுக்கு வந்த நிசாந்திடம் மோட்டார் சைக்கிள் எங்கே? என்று மனைவி அப்ரினி கேட்டார். குடிபோதையில் ஓட்டி வந்ததாக மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து விட்டதாகவும், காலையில் அபராத தொகை கட்டவேண்டும் என்றும் கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவருடைய மனைவி தூங்க சென்றுவிட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் விரக்தி அடைந்த நிசாந்த், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று அதிகாலையில் அப்ரினி எழுந்து பார்த்தபோது தனது கணவர் நிஷாந்த் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த எம்.ஜி.ஆர்.நகர் போலீசார், நிசாந்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.