ஓடும் ரெயிலில் செல்போன் திருடிய வாலிபர் கைது
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நல்லதண்ணீர் குளம் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் கணேசன் (வயது 35). இவர் போத்தனூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் கம்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 29-ந்் தேதி பள்ளிப்பட்டில் இருந்து போத்தனூருக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே வரும் போது தூக்கத்தில் இருந்த கணேசன் திடீரென விழித்து பார்த்தார். அப்போது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை காணவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கணேசன் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வேடல் பெரிய தெரு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கர் (34) என்பதும், ஓடும் ரெயிலில் செல்போன் திருடியதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.