ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சுரண்டை:
சுரண்டை அருகே கோவிலாண்டனூர் பகுதியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மொபட்டில் வந்தவர் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றார். அவரை பிடித்து விசாரித்த போது அதே ஊர் மேலத்தெருவை சேர்ந்த சார்லஸ் மகன் திவாகர் (வயது 30) என்பதும், இவர் ரேஷன் அரிசியை கோவிலாண்டனூர் காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திவாகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.