பெண்ணுக்கு மசாஜ் செய்வதை ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர் கைது
வடமாநில வாலிபரின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பெண்ணுக்கு மசாஜ் செய்த வீடியோ காட்சி இருந்தது.;
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஆயுர்வேத மற்றும் சித்தா சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண், பெண்களுக்கு மசாஜ் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் 42 வயதுடைய பெண் ஒருவர் மசாஜ் செய்வதற்காக வந்தார். அவருக்கு அங்கு பணியமர்த்தப்பட்ட பெண் ஒருவர் மசாஜ் சிகிச்சை அளித்தார்.
அப்போது அந்த அறையில் உள்ள வெண்டிலேட்டர் வழியாக செல்போன் கேமரா மூலமாக வீடியோ பதிவு செய்ததை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கூச்சலிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அவரது உறவினர்களுக்கும், வடசேரி போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் மற்றும் அவரது உறவினர்களும் அங்கு வந்தனர்.
இது தொடர்பாக அங்கிருந்த வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் யாரும் வீடியோ எடுக்கவில்லை என்று கூறினார்கள். இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வடமாநில வாலிபரின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பெண்ணுக்கு மசாஜ் செய்த வீடியோ காட்சி இருந்தது.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை போலீசார் முன்னிலையில் சரமாரியாக தாக்கினார்கள். இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை அவர்களிடம் இருந்து மீட்டு வடசேரி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அந்த வடமாநில வாலிபர் மேற்கு வங்காளத்தை சோ்ந்த ரோகன் மந்தர் (23) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 2 ஆண்டுகளாக மசாஜ் சென்டரில் தங்கி வேலை பார்த்து வருவதாகவும் கூறினார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.