இளம்பெண் சரமாரி குத்திக்கொலை-கத்தியுடன் கணவர் போலீசில் சரண்
நெல்லையில் தர்காவில் இளம்பெண் சரமாரியாக குத்திக்ெகாலை செய்யப்பட்டார். கத்தியுடன் கணவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
பேட்டை:
நெல்லையில் தர்காவில் இளம்பெண் சரமாரியாக குத்திக்ெகாலை செய்யப்பட்டார். கத்தியுடன் கணவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில்
நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் மகபூப்ஜான். இவருடைய மகன் இம்ரான் கான் (வயது 32). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கும், நெல்லை டவுன் முகமது அலி தெருவைச் சேர்ந்த மற்றொரு மகபூப்ஜான் மகள் ஹசீனா பேகம் (28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அபியா (6) என்ற மகளும், முகம்மது அசரத் (5) என்ற மகனும் உள்ளனர்.
குடும்ப தகராறு
பின்னர் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹசீனா பேகம் கணவரை விட்டு பிரிந்து, நெல்லை டவுன் முகமது அலி தெருவில் உள்ள தாயார் பாத்திமா பேகத்தின் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றார்.
இந்த நிலையில் ஹசீனா பேகத்தின் மாமனார் மகபூப்ஜான் நேற்று காலையில் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தனது மருமகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அவரை டவுனில் உள்ள தாயாரின் வீட்டிலேயே இருக்குமாறு தெரிவித்துள்ளார்.
தர்காவுக்கு அழைத்து சென்று...
இதற்கிடையே, நேற்று மதியம் இம்ரான்கான் தனது மனைவியை பார்ப்பதற்காக டவுனுக்கு சென்றார். அப்போது அவர் மனைவியிடம் அன்பாக பேசியவாறு அங்கு சாப்பிட்டுள்ளார். பின்னர் மனதுக்கு கஷ்டமாக உள்ளதால் தொழுகை நடத்த செல்வோம் என்று மனைவியிடம் நைசாக கூறினார்.
இதனை உண்மை என்று நம்பிய ஹசீனா பேகம் கணவருடன் டவுன் கோடீசுவரன் நகரில் உள்ள குளத்தாங்கரை தர்காவுக்கு சென்றார். அங்கு இருவரும் பிரார்த்தனை செய்தனர்.
சரமாரி குத்திக்கொலை
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த இம்ரான்கான் தனது மனைவி என்றும் பாராமல் ஹசீனா பேகத்தின் வயிற்றில் சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அலறி துடித்தவாறு அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பேட்ைட போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
கணவர் சரண்
இறந்த ஹசீனா பேகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, இம்ரான் கான் ரத்தக்கறை தோய்ந்த கத்தியுடன் டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவரை பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், இம்ரான்கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் தர்காவில் இளம்பெண்ணை கணவரே சரமாரியாக குத்திக் கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.