சொத்து தகராறில் இளம்பெண் அடித்துக்கொலை

பெரியபாளையத்தில் சொத்து தகராறு காரணமாக இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதில் தி.மு.க. நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-02 22:13 GMT

பெரியபாளையம்,

எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் திராவிடபாலு. இவர், தி.மு.க ஒன்றிய செயலாளராகவும், கன்னிகைப்பேர் ஊராட்சிமன்ற தலைவராகவும் பதவி வகித்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இவருடைய மனைவி செல்வி (வயது 55). இவருடைய மகன் முருகன் (42), மருமகள் ரம்யா(32). முருகனின் மகன் கருணாநிதி (15).

இவர்களுக்கும், திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலுவுக்கும் நிலம் பாகப்பிரிவினை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. சத்தியவேலு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார்.

இரும்பு கம்பியால் தாக்குதல்

நேற்று முன்தினம் இரவு இது சம்பந்தமாக இரு குடும்பங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சத்தியவேலுவின் மகன் பவுன்குமார் என்ற விஷால் (22) அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து பெரியப்பா குடும்பத்தை சேர்ந்த செல்வி, முருகன், ரம்யா மற்றும் கருணாநிதி ஆகியோரை கண்மூடித்தனதாக தாக்கி விட்டு தப்பினார். இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர்.

சிகிச்சை பலனின்றி பலி

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்அவர்களை மீட்டு மஞ்சங்காரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக பலியானார்.

படுகாயம் அடைந்த செல்வி, முருகன், கருணாநிதி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய விஷாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்