இளம்பெண் பலாத்காரம்: சிறை வார்டர்கள் 2 பேர் கைது

இளம்பெண் பலாத்கார வழக்கில் சிறை வார்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-12 21:00 GMT

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டி ரோந்து பிரிவு போலீசார் கடந்த 11-ந் தேதி இரவு சேலம் மத்திய சிறை வழியாக ரோந்து சென்றனர். அப்போது சிறையின் அருகில் உள்ள சாலையோரம் 20 வயதுடைய இளம்பெண் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தென் அழகாபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர் நள்ளிரவு நேரத்தில் தனியாக எதற்கு நிற்கிறீர்கள் என்று கேட்டு உள்ளனர்.

அதற்கு அந்த பெண் அழுதபடி தன்னை சேலம் சிறையில் பணியாற்றி வரும் வார்டர்கள் 2 பேர் பலாத்காரம் செய்தனர். மேலும் அடிக்கடி வரவழைக்கின்றனர். வரவில்லை என்றால் ஆபாசமாக எடுத்து வைத்திருக்கும் எனது புகைப்படங்களை காண்பித்து மிரட்டி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

புகார்

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் சென்று புகார் கொடுக்கும்படி கூறி அந்த பெண்ணை அன்று இரவு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பெண் மறுநாள் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

அதில் சேலம் சிறையில் வார்டராக பணியாற்றி வரும் அருண் (வயது 30), சிவசங்கர் (31) ஆகிய 2 பேர் மிரட்டி என்னை பலாத்காரம் செய்தனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் உள்ள எனது ஆபாச வீடியோக்களை கைப்பற்றி அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

2 பேர் கைது

இந்த வழக்கு தொடர்பாக சேலம் சிறையில் வார்டர்களாக பணியாற்றும் திருப்பத்தூர் மாவட்டம் கரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருண், சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த சிவசங்கர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்