உடல்நலக்குறைவால் இளம்பெண் சாவு;துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சியில் ஒரேநாள் இரவில் உடல்நலக்குறைவால் மகள் இறந்ததை தொடர்ந்து, துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே போலீசாருக்கு தெரியாமல் இருவரின் உடல்களையும் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-29 19:26 GMT

திருச்சியில் ஒரேநாள் இரவில் உடல்நலக்குறைவால் மகள் இறந்ததை தொடர்ந்து, துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே போலீசாருக்கு தெரியாமல் இருவரின் உடல்களையும் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பேஷன் டிசைனிங்

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் உலகநாதபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் வீரையா (வயது 50). இவர் கருமண்டபம் பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடை ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (45). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு கிஷோர்குமார் (24), திலீப்குமார் (19) என்ற இரு மகன்களும், அஷ்டலட்சுமி (21) என்ற மகளும் உள்ளனர். இதில் கிஷோர் குமார் நடன பயிற்சியாளராக உள்ளார். திருச்சியில் உள்ள கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வந்த அஷ்டலட்சுமி காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீரையா தனது மகளை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதன்காரணமாக கடந்த 2021-ம் ஆண்டுக்கு பிறகு அஷ்டலட்சுமி கல்லூரிக்கு செல்லவில்லை.

செய்வினை கோளாறு

மேலும் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட சித்ரா, "தனது மகளுக்கு நேரம் சரியில்லை. அவளுக்கு செய்வினை கோளாறு இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு பிறகு எல்லாம் சரியாகிவிடும். டாக்டரிடம் மகளை அழைத்து செல்லவேண்டாம்" என்று கூறியுள்ளார். இதனால் வீரையா தனது மகள் அஷ்டலட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கிஷோர்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியூர் சென்றுவிட்டார். வீரையா நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சித்ரா, அஷ்டலட்சுமி, திலீப்குமார் ஆகியோர் மட்டும் இருந்தனர். இரவு 3 பேரும் சாப்பிட்டதும், திலீப்குமார் நள்ளிரவு 11 மணி அளவில் தூங்க சென்றுவிட்டார். அப்போது, சித்ரா, தனது மகளுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று காலை 5.30 மணி அளவில் திலீப்குமார் எழுந்து பார்த்த போது, அஷ்டலட்சுமி படுக்கையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சித்ரா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த திலீப்குமார், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாயின் உடலை கீழே இறக்கி வைத்துவிட்டு, தனது தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். உடனே வீரையா வீட்டுக்கு வந்து நடந்த விவரங்களை தனது மகனிடம் கேட்டுள்ளார். பின்னர், தனது, மனைவி, மகள் இறந்தது பற்றி உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டு, 2 பேரின் உடல்களையும் குளிப்பாட்டி இறுதிச்சடங்கு செய்து, நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அதற்குள், அக்கம்பக்கத்தினர் கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர்.

மகள் இறந்த துக்கம்

இதுபற்றி அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் வீரையாவின் வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, அஷ்டலட்சுமி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதும், மகள் இறந்த துக்கம் தாங்காமல் சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சித்ரா, அஷ்டலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வீரையா கொடுத்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாலையில் பிரேத பரிசோதனை முடிந்து இருவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியதுடன், போலீசாருக்கு தெரியாமல் உடல்களை அடக்கம் செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்