தவறான சிகிச்சையால் இளம்பெண் சாவு: வைத்தியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
நெல்லையில் தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்த வழக்கில் வைத்தியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இளம்பெண் சாவு
நெல்லை மாவட்டம் அம்பை ஆசிரியர் காலனி மல்லிகை தெருவை சேர்ந்தவர் முத்து வடிவேல்ராஜ். இவருடைய மகள் ஆறுமுக பாலா (வயது 23). இவர் பி.சி.ஏ. முடித்து விட்டு ஒரு பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் எம்.பி.ஏ. படித்து வந்தார்.
ஆறுமுக பாலா கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ந்தேதி நெல்லை தச்சநல்லூர் புதுஅம்மன் கோவில் தெருவில் உள்ள மாரியப்பன் வைத்தியர் வீட்டுக்கு வந்தனர்.
அங்கு மாரியப்பன், ஆறுமுக பாலாவுக்கு கழுத்தை தடவி முரட்டு தனமாக தவறான சிகிச்சை அளித்து உள்ளார். அப்போது சுய நினைவு இழந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.
5 ஆண்டு சிறை
இந்த வழக்கு நெல்லை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி விஜயகுமார் வழக்கை விசாரித்து மாரியப்பனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அதில் ரூ.25 ஆயிரத்தை இறந்த பெண் குடும்பத்துக்கு வழங்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் ஜெய பிரபா ஆஜரானார்.