ஓடும் பஸ்சில் 18½ பவுன் நகை திருடிய இளம்பெண் கைது

குள்ளஞ்சாவடியில் ஓடும் பஸ்சில் 18½ பவுன் நகை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-16 18:45 GMT

குள்ளஞ்சாவடி, 

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ம.கொளக்குடியை சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி கலைவாணி(வயது 35). இவர் கடந்த 7.2.2022 அன்று கடலூரில் உள்ள தனது சித்தி மகன் திருமணத்திற்கு வந்தார். பின்னர், தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி ஒரு பையில் வைத்துக்கொண்டு, தனது குழந்தைகளுடன் கடலூரில் இருந்து விருத்தாசலம் சென்ற தனியார் பஸ்சில் ஏறினார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடலூர் முதுநகரை தாண்டி சென்றதும், கலைவாணிக்கு சீட்டில் அமருவதற்கு இடம் கிடைத்தது. சிறிது நேரத்தில் தான் வைத்திருந்த பையை பார்த்தபோது, அதை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கலைவாணி, குள்ளஞ்சாவடி பஸ் நிறுத்தத்திற்கு வந்ததும் இறங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் 18½ பவுன் நகையை திருடியவரை தேடி வந்தனர்.

இளம்பெண் கைது

இந்த நிலையில் குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று முன்தினம் கடை வீதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அடகு கடை அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் நட்ராபட்டு குட்ட கிராமத்தை சேர்ந்த நடராஜன் மனைவி மங்கா (வயது 33) என்பதும், ஓடும் பஸ்சில் கலைவாணியின் நகையை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மங்காவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 18½ பவுன் நகையை மீட்டனர். திருச்சி, செங்கல்பட்டு, சேலம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற திரு விழாக்களிலும், ஓடும் பஸ்களிலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்