பெண்கள் இடஒதுக்கீட்டில் 2 தடைகளை மத்திய அரசு வைத்துள்ளது - ப.சிதம்பரம்

பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் 2 தடைகளை வேண்டும் என்றே மத்திய அரசு வைத்துள்ளதால், 2029-ம் ஆண்டு ேதர்தலிலும் நடைமுறைக்கு வராது என ப.சிதம்பரம் கூறினார்.;

Update: 2023-09-30 21:30 GMT

ப.சிதம்பரம் பேட்டி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த மசோதா 1996-ல் தேவேகவுடா பிரதமராக இருந்தபோது அறிமுகம் செய்ததாகும். பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, 2 முறை நிறைவேற்ற முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது மாநிலங்கள் அவையில் இந்த மசோதா நிறைவேறியது. அதே வரைவு மசோதாவை நிறைவேற்றி ஒப்புதல் வாங்கி இருந்தால் 2024 தேர்தலுக்கே இச்சட்டம் அமலுக்கு வந்திருக்கும். ஆனால் பா.ஜனதா அரசு வேண்டுமென்றே 2 தடைகளை வைத்துள்ளது.

2029 தேர்தலிலும் வராது

ஒன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மற்றொன்று தொகுதிகளை மறுவரையறை செய்வது. எனவே இச்சட்டம் 2024 தேர்தலில் மட்டுமல்ல, 2029 தேர்தலிலும் கூட அமலுக்கு வராது. காரணம் அரசியல் சாசனத்தில் 88-வது பிரிவில் 3-வது உட்பிரிவில் 2026-ம் ஆண்டிற்கு பிறகே மக்கள் தொகை கணக்கெடுப்பு என கூறப்பட்டுள்ளது.

2026-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினாலும், இந்த பணி முடிய 2028-ம் ஆண்டு வரை ஆகும். அதன் பிறகு அடுத்த தடையாக தொகுதியை மறுவரையறை செய்ய வேண்டும்.

மறுவரையறை

இதற்கு நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளையும் மறுவரையறை செய்ய வேண்டும் என்பது கடினமான பணியாகும். எனவே இச்சட்டம் நிச்சயம் அமலுக்கு வராது.

மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பா.ஜனதா அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை, விருப்பமும் இல்லை. 543 தொகுதிகளிலும் மக்கள் தொகை அடிப்படையிலான மறு வரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையவும், வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்