பேனர் கிழிப்பு; தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மறியல்
பேனர் கிழிக்கப்பட்டதால் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் கட்சியின் தொடக்க நாளான தை 1-ந்தேதியை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கிழித்து சென்றனர். இதையடுத்து அந்த பேனரை மர்ம நபர்கள் வேண்டும் என்றே கிழித்துள்ளனர் என்று கூறி, நள்ளிரவில் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களை நான்கு ரோட்டில் சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் பேனரை கிழித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.