கலைஞர் விருது: எஸ்.பி.முத்துராமன் தலைமையில் குழு அமைப்பு

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதாளரை தேர்வு செய்ய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-29 13:33 GMT

சென்னை:

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதாளரை தேர்வு செய்ய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கலைஞர் கருணாநிதியின் பெயரில் ''கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது'' வழங்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வகையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை 2022-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்க ஏதுவாக, விருதாளரை தேர்வு செய்ய திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனை தலைவராகவும், நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக்குழுவினை அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.

தேர்வுக்குழுவால் பரிந்துரைக்கப்படும் விருதாளருக்கு விருதுத் தொகையான ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப்பரிசு ஆகியவற்றினை கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3-ந் தேதியன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்