மாணவர்களிடம், ஆசிரியர்கள் மனம்விட்டு பேச வேண்டும்

தற்கொலைகளை தடுக்க மாணவர்களிடம், ஆசிரியர்கள் மனம்விட்டு பேச வேண்டும் என்று கருத்தரங்கில் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

Update: 2022-10-13 17:38 GMT

தற்கொலைகளை தடுக்க மாணவர்களிடம், ஆசிரியர்கள் மனம்விட்டு பேச வேண்டும் என்று கருத்தரங்கில் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

கருத்தரங்கம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அண்ணா நிர்வாகப் பயிற்சி கல்லூரி சார்பில் மாணவர்களின் நடத்தை, உணர்ச்சி மேலாண்மை, ஆளுமை மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் முகமது மிரான், பயிற்சியாளர் மனோகரன் ஆகியோர் பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இது சம்பந்தமாக பயிற்சி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

மாணவர்கள் எல்லா சூழலிலும் ஒரே மாதிரி நடந்துகொள்வது கிடையாது. அவர்களது நடத்தை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி மாறுவதை நீங்கள் பார்க்கலாம். செய்த தவறுக்கு பல்வேறு விளக்கங்களை தரலாம். மாணவர்கள் தான் வளர்ந்த சூழல், தங்களது சொந்த தேவைகள் மற்றும் உளவியல் கூறுகளின்படி சட்டென மாறிவிடுகிறார்கள். மோசமான நடத்தைகளை அவர்கள் தேர்வு செய்ததன் காரணங்களை அறிய வேண்டியது உங்களுக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும்.

மனம்விட்டு பேச வேண்டும்

தனிமையில் இருக்கக்கூடிய மாணவர்களை கண்காணிக்க வேண்டும். மனசோர்வு என்பது சோகமாக இருப்பது மட்டுமல்ல. சிரித்த முகத்தோடும் இருப்பார்கள். ஆனால் அவர்களின் மனதில் ஏதாவது ஒன்றினால் புழுங்கிக்கொண்டிருப்பார்கள். சிரித்தால் அந்த குழந்தைக்கு பிரச்சினை ஏதும் இல்லை என்று எண்ணிவிடக்கூடாது. மாணவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டுமே தவிர, என்ன செய்யக்கூடாது என சொல்லக்கூடாது.

தற்போது மாணவர்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். சின்ன, சின்ன விஷயங்களுக்கு பெரிய முடிவுகளை எடுக்கின்றனர். அவர்களோடு மனம்விட்டு பேச வேண்டும். பாடம் நடத்துவதோடு உங்களின் பணி முடியவில்லை. மாணவர்களின் உளவியல் நெருக்கடி, தற்கொலைகளை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்