அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் சாதிக்க ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்-அமைச்சர் மூர்த்தி பேச்சு

அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் சாதிக்க ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கூறினார்

Update: 2022-07-04 19:30 GMT

மேலூர், ஜூலை.5-

அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் சாதிக்க ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மாணவிகளுக்கு பரிசு

மேலூர் தாலுகா அளவில் அரசு பள்ளிகளில் படித்த12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினார். மேலூர் டைமண்ட் ஜுபிலி கிளப் தலைவர் மணிவாசகம் தலைமை தாங்கினார். முன்னாள் யூனியன் தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.12-ம் வகுப்பு தேர்வில் தாலுகா அளவில் 576 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்த மாணவி அர்ச்சனாவுக்கு ரூ.25 ஆயிரம், 2-ம் மதிப்பெண் 571 பெற்ற மேலூர் அரசு பெண்கள் பள்ளி மாணவி பவித்ராவிற்கு ரூ.20 ஆயிரம், மூன்றாம் மதிப்பெண் 565 பெற்ற கொட்டாம்பட்டி அரசு பள்ளி மாணவி சுவேதாவிற்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. 10-ம் வகுப்பு தேர்வில் 460 மதிப்பெண் பெற்ற செம்மனிப்பட்டி பள்ளி மாணவி சுகாசினிக்கு ரூ.25 ஆயிரம், 459 மதிப்பெண் பெற்ற திருவாதவூர் அரசு பள்ளி மாணவி ஐஸ்வர்யாவிற்கு ரூ.20 ஆயிரம், 453 மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவிகள் சந்தியா, ரசிகாவிற்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.

கூடுதல் கவனம் தேவை

அதன் பின்னர் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. கிராமப்புற மாணவ-மாணவிகள்12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்வி பயில முடியாமல் இருந்து வந்தனர். அதை மாற்றிட அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மேல் படிப்பு படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். மாணவிகள்தான் அதிகமான மதிப்பெண் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே மாணவர்கள் அதிக அளவில் படிப்பதற்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் அதிக அளவில் முன்னேறுவது ஒவ்வொரு குடும்பம், நாட்டின் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து மேலூர் அரசு கலைக்கல்லூரி சாலை சந்திப்பிலும், சிவகங்கை சாலை உள்ள நான்கு வழிச்சாலை பாலம் அருகிலும், மேலூர்-மதுரை நான்கு வழிச்சாலை சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அமைச்சர் மூர்த்தி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின், ஆணையாளர் ஆறுமுகம், நகராட்சி பொறியாளர் பட்டு ராஜன், மேலூர் முன்னாள் நகர செயலாளர் துரைமகேந்திரன், பொருளாளர் ரவி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெங்கடேச பெருமாள் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்