ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்-அமைச்சர் வேண்டுகோள்

ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update:2023-10-08 01:07 IST

ஆசிரியர்களுடன் அன்பில்

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள கலையரங்க திருமண மண்டபத்தில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் சக ஆசிரியர்களை கொண்டாடுவோம் புத்தகம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் மனசு பெட்டியை அமைச்சர்கள் திறந்து அதில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை படித்து பரிசீலனை செய்தனர்.

வட துருவம், தென் துருவம்

இதையடுத்து, அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது கூறியதாவது:- மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கெமிக்கல் என்ஜினீயரிங் எடுத்து படிப்பதற்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்று குறிப்பிட்டார். அவர் வட துருவம், நான் தென் துருவம். அவருக்கு நேர்மாறாக உள்ளவன். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறையை திறமையாகவும், நேர்த்தியாகவும் பணியாற்றி வருகிறார். எனக்கு தற்போது 72 வயதாகி விட்டது. கல்வி கற்பதற்கு காலம் கடந்து விட்டது. தி.மு.க.வும், தமிழக அரசும் என்றும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆசிரியர்களை மதிப்பவர்கள் தான் என்றும் வளர முடியும். எங்களை நம்பி ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தை கைவிட்டு உள்ளனர். மகிழ்ச்சி, கண்டிப்பாக வாக்குறுதிகளை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதல்-அமைச்சரிடம் கூறி நிறைவேற்றி தருவார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்கள் போராட்டம்

இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும் போது கூறியதாவது:- தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வந்த வேளையில், ஆசிரியர்கள் போராட்ட நிகழ்வு நடைபெற்றது. இதற்கு விளக்கமளிக்க இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொள்கிறேன். பள்ளிக்கல்வித்துறை அறிவித்த 53 திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம்.

ஆசிரியர்களின் போராட்டத்தை தவறாக நினைக்கவில்லை. ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன். ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறையும் உறவினர் போன்றவர்கள். போராட்டங்களால் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும், ஆசிரியர்களுக்கு வேண்டியதை செய்வது தி.மு.க. ஆட்சியில் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சிரிப்பலை

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது நாங்க எல்லாம் ஜெயிச்சதுக்கு முக்கிய காரணம் ஆசிரியர்களான நீங்கள் தான் என்பது எங்களுக்கு தெரியும். எல்லாவற்றையும் நான் இங்கே பேசினால் பேப்பர்காரர்கள் எல்லாத்தையும் எழுதி விடுவார்கள் என்று கூறியவுடன் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. மேலும் நான் கூட என் துறை அதிகாரிகளை வைத்து இது போன்ற ஒரு கூட்டம் நடத்தலாம் என யோசித்தேன். நீங்களாவது அமைதியாக இருந்து கேட்டுக் கொண்டு உள்ளீர்கள். என் துறையில் உள்ள அதிகாரிகள் அப்படி இல்லை என்று கூறினார் இதற்கும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

Tags:    

மேலும் செய்திகள்