ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-05 12:33 GMT

கூடலூர், 

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டம் கூடலூர் அக்ரஹாரத்தில் உள்ள தனியார் அரங்கில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கணேசன், துணை பொதுச்செயலாளர் ரவி, தலைமை நிலைய செயலாளர்கள் வரதராசன் சீனி சின்னசாமி, துணைத்தலைவர் நெல்சன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நீலகிரி மாவட்ட செயலாளர் அருண்குமார் வரவேற்றார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தியோடர் ராபின்சன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக எழுதும் தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 2012-ம் ஆண்டுக்கு முன்பு நியமனமான அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டம்

அரசு உதவி பெறும் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருப்பின், அவர்களை தகுதிக்கு ஏற்ப அரசு பள்ளிக்கு மாற்றிட வழிவகை செய்ய வேண்டும். பண பலன்கள் பெறுவதற்காக ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது தீர்வு காண காலஅளவு நிர்ணயம் செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநில பொதுச்செயலாளர் தியோடர் ராபின்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- தமிழக நிதிநிலை பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

விரிவுபடுத்த வேண்டும்

அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வி படிக்கும் போது, மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த குழு அமைப்பதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்