அரசு பாதுகாப்பு இல்லங்களில் ஆசிரியர்கள் கட்டாயம் தங்க வேண்டும்; அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு

அரசு பாதுகாப்பு இல்லங்களில் ஆசிரியர்கள் கட்டாயம் தங்க வேண்டும் என்று வேலூரில் அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-07-01 16:23 GMT

அரசு பாதுகாப்பு இல்லங்களில் ஆசிரியர்கள் கட்டாயம் தங்க வேண்டும் என்று வேலூரில் அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் ஆய்வு

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் செயல்படும் அரசினர் பாதுகாப்பு இடத்தை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு செயலாளர் ஷம்புகல்லோலிகர், வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இருந்தனர். ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள அரசின் பிற்காப்பு இல்லம், வரவேற்பு இல்லம், குழந்தைகள் பாதுகாப்பு இல்லம், சிறப்பு இல்லம் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம், அந்த இல்லங்களில் தேவைப்படும் வசதிகள் குறித்தும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த போது அங்கு பணியில் இல்லாத காரணம் குறித்து கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் ஆய்வுக்கு சென்ற நேரத்தில் அவர்கள் இல்லை. அந்த நேரம் எங்களது பணி நேரம் இல்லை என்று கூறினர். எனவே அவர்களை காலையில் வெகு சீக்கிரமாகவே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அங்கேயே கட்டாயம் தங்க வேண்டும்.

சிறப்பு பயிற்சி

குழந்தைகளுக்கு விளையாட்டு, யோகா, இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உபகரணங்களும் அளிக்கப்பட உள்ளது. அதோடு, பெண் குழந்தைகளுக்கு கார்மெண்ட்ஸ் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுவதோடு, துணிகளை தைத்து வழங்குவதற்கான ஆர்டர் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுதவிர, காலத்துக்கு ஏற்றவாறு கணினி ஆபரேட்டர், டைப்ரைட்டிங் உள்ளிட்ட பணிகள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இல்லங்களில் குழந்தைகளுக்கு கட்டில், சீருடையும் வழங்கப்பட உள்ளது. குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன்மூலம், பெண் குழந்தைகளில் உயர்கல்வி உறுதி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்