மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு

தாவரவியல், உயிரியல் பாடங்களில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.

Update: 2022-07-08 13:38 GMT

தாவரவியல், உயிரியல் பாடங்களில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு

பள்ளிக் கல்வித் துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் உள்பட பல்வேறு படங்களை நடத்தும் ஆசிரியர்களுக்கு காட்பாடி காந்திநகரில் உள்ள ஒருங்கிணைந்த கல்வி திட்ட வளாகத்தில் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக நடந்த யிற்சி வகுப்புக்கு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஊக்கம் அளிக்க வேண்டும்

பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. கொஞ்சம் உழைத்தால் நாம் 30 இடத்திற்குள் வரலாம். கடினமாக உழைத்தால் 20 இடத்திற்குள் வந்து விடலாம். இதற்கு ஆசிரியர்கள் கவனத்தோடும் செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு மாணவனும் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்க வேண்டும். 90 சதவீத தேர்ச்சிகள் உள்ள பள்ளிகள் 95 சதவீதம் பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உயிரியியல், தாவரவியல் பாடங்களில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்க வேண்டும்.

விலங்கினம், தாவரங்களை பற்றி மாணவர்களுக்கு புரிய வைத்து பாடம் நடத்த வேண்டும். பழைய பாடத்தையே எடுத்தால் மாணவர்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டு விடும்.

100 சதவீதம் தேர்ச்சி

தாவரம் நமக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது, அவை வெப்பமயமாதலை எவ்வாறு தடுக்கிறது, தாவரத்தின் உற்பத்தியை பெருக்க எவ்வாறு நடவடிக்கை வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஆய்வக வசதிகள் சரியில்லாத பள்ளிகள் குறித்து ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு ஆய்வகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கப்படும். தாவரவியல், உயிரியியல் படங்களில் மாணவர்கள் கட்டாயமாக 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் பூங்கொடி, வேலூர் மாநகராட்சி துணைமேயர் எம்.சுனில்குமார், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சிவசங்கரி பரமசிவம், சாமுண்டீஸ்வரி குணாளன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்