விளையாட்டு போட்டியில் செல்பி எடுத்து மகிழ்ந்த ஆசிரியர்கள்

ஜோலார்பேட்டையில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் ஆசிரியர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்ததால், மாணவிகள் வெயிலில் நின்று அவதிக்குள்ளானார்கள்.

Update: 2023-02-10 16:51 GMT

விளையாட்டு போட்டி

திருப்பத்துர் மாவட்டத்தில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதில் பெரும்பாலான தடகள போட்டிகள் ஜோலார்பேட்டையில் அமைந்துள்ள சிறு விளையாட்டரங்கில் நடந்து வருகிறது. பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் சிறு விளையாட்டரங்கில் நேற்று நடந்தது.

இதில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் தொடங்க முற்பட்ட போது, மாணவிகளின் கைகளில் அவரவர் பதிவெண் எழுதப்பட்டிருந்தது. சில மாணவிகளின் கைகளில் அந்த பதிவெண் பாதி அழிந்த நிலையில் காணப்பட்டது. மேலும் அந்த எண்ணும், மாணவிகள் பெயரும் ஒன்றாக உள்ளதா? என உடற்கல்வி ஆசிரியர்கள் சோதித்த போது, பலரின் பெயர்கள் விடுபட்டிருந்தன. இதனால் குழப்பமடைந்த ஆசிரியர்கள், மீண்டும் அவர்களை பதிவு செய்தனர். இதனால் கடும் வெயிலில் காலில் ஷூ கூட இல்லாமல் மாணவிகள் பரிதவிப்பாக காணப்பட்டனர்.

'செல்பி' எடுத்து விளையாண்ட ஆசிரியர்கள்

சுடும் வெயிலில் கால் சுட சுட பரிதவித்து நின்றிருந்த மாணவிகளை என்ன ஏது எனக் கேட்காமல், அங்கு நின்றிருந்த சில பெண் மற்றும் ஆண் உடற்கல்வி ஆசிரியர்கள் கல்லுரி மாணவர்களைப் போல தங்களுக்குள் செல்போனில் செல்பி எடுத்தபடி இருந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.

பின்னர் ஒரு வழியாக 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் தொடங்கி, அந்த மைதானத்தை இரு சுற்றுக்கள் ஓடி முடிந்தது. முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடத்துவதன் முக்கிய காரணம், மாணவ, மாணவிகளிடையே புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணர்வதற்காகத்தான். ஆனால் இது போன்ற சில 'செல்பி' ஆசிரியர்களால், முதல்-அமைச்சர் கோப்பை போட்டிக்கான நோக்கம் சிதைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்