மாணவிகள் போராட்டம் எதிரொலி:சேலம் கோட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியை இடமாற்றம்

சேலத்தில் மாணவிகள் போராட்டம் எதிரொலியாக கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-10-07 20:38 GMT

சேலம்

சேலத்தில் மாணவிகள் போராட்டம் எதிரொலியாக கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகள் போராட்டம்

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மாணவிகள் தண்ணீர் பிடித்தபோது அதில் புழுக்கள் இருந்ததாக தெரிகிறது.

இதுபற்றி மாணவிகள் சிலர் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணியிடம் புகார் தெரிவித்தபோது, அவர்களை முட்டி போட வைத்து தண்டனை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி மோகன், தொடக்க கல்வி அதிகாரி சந்தோஷ் மற்றும் தாசில்தார் செம்மலை ஆகியோர் போராட்டம் நடத்திய மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

தலைமை ஆசிரியை இடமாற்றம்

அப்போது பள்ளியில் குடிநீர் தொட்டி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் சரியில்லை என்று மாணவிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதையடுத்து குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்றும், தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்குள் சென்றனர். மேலும், மாணவிகளை முட்டி போட வைத்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணியிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டார்.

கருத்து வேறுபாடு

இது ஒருபுறம் இருக்க, மாணவிகளின் போராட்டம் குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் போராட்டத்தில் ஈடுபட தூண்டிவிட்டது ஆசிரியைகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதாவது, பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணிக்கும், சில ஆசிரியைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மாணவிகள் போராட்டத்தின் போது, பிடித்திருந்த பதாகைகளில் ஆசிரியைகளுக்கு ஆதரவான வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.

4 ஆசிரியைகள் மீது சந்தேகம்

எனவே, மாணவிகளை போராட்டத்தில் ஈடுபட செய்தது ஆசிரியைகள் தான் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 4 ஆசிரியைகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மாணவிகளின் போராட்டம் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அவர்களை ஒரு ஆசிரியையாவது பேசி வகுப்புக்கு செல்ல சொல்லாதது ஏன்? என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர், ஆசிரியைகளிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பதில் சொல்லாமல் மவுனமாக இருந்ததாகவும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே புகார்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி, மாணவிகள் சேர்க்கையின்போது கூடுதல் பணம் வசூலித்ததாக புகாரில் சிக்கினார். மேலும், சில மாதங்களுக்கு முன்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு பக்கங்களை தைக்கும் பணிகளில் மாணவிகளை ஈடுபடுத்தியதாக எழுந்த புகாரில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் மீண்டும் அதே பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியமர்த்தப்பட்டு, தற்போது மாணவிகள் புகாரின்பேரில் அவர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்