நாகர்கோவில்: அரசுபள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பணி இடைநீக்கம் - கல்வித்துறை நடவடிக்கை
நாகர்கோவிலில் அரசுபள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்து கல்வித்துறைபணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
நாகா்கோவில்:
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ் நல்லதம்பி (வயது 45). இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ஆசிரியர் ஆம்ஸ் நல்லதம்பி அந்த பள்ளியில் படிக்கும் 7-ம் வகுப்பு மாணவியிடம் வகுப்பறையில் வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆசிரியரின் அத்துமீறல் குறித்து அந்த மாணவி, ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்த குழந்தைகள் நலபாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் ஆம்ஸ் நல்லதம்பி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை அறிந்ததும் ஆசிரியர் ஆம்ஸ் நல்லதம்பி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே ஆசிரியரின் அத்துமீறல் குறித்து கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது. இதனை தொடர்ந்து அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது ஆம்ஸ் நல்லதம்பியை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார்.