கடன் தொல்லையால் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

கருங்கல் அருகே கடன் தொல்லையால் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-31 17:38 GMT

கருங்கல்:

கருங்கல் அருகே கடன் தொல்லையால் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடன் தொல்லை

கருங்கல் அருகே உள்ள மாங்கரை வட்டக்கோட்டையை சேர்ந்தவர் சின்றோ ராஜ் (வயது34), ஆசிரியர். இவர் அந்த பகுதியில் ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி ஆங்கில பயிற்சி வகுப்பு நடத்தி வந்தார்.

கொரோனா காலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டார். இதற்காக பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கினார். வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிப்பட்டார். இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுக்க தொடங்கியதாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால், மனமுடைந்த சின்றோ ராஜ் தனது படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடன்தொல்லையால் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்