ஆசிரியையை தாக்கி 5½ பவுன் நகை பறிப்பு

நித்திரவிளை அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையை தாக்கி 5½ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-09-29 18:45 GMT

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையை தாக்கி 5½ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பள்ளி ஆசிரியை

நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரமிளா (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

பிரமிளா பள்ளிக்கு வழக்கம் போல் நேற்று காலை ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் ஆலூமூட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று அவரை பார்த்தார். அங்கிருந்து மீண்டும் அவர் ஸ்கூட்டரில் புறப்பட்டார். அப்போது அவரை பின்தொடர்ந்தபடி 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

தாக்கி நகை பறிப்பு

கிராத்தூர் வளைவு பகுதியில் சென்றடைந்த போது திடீரென மர்மஆசாமிகள் பிரமிளாவை தாக்கி 5½ பவுன் நகையை பறித்தனர். மேலும் ஸ்கூட்டரை எட்டி உதைத்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த தாக்குதலில் ஸ்கூட்டருடன் கீழே விழுந்த பிரமிளா படுகாயமடைந்தார். உடனே அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பிறகு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஆசிரியையை தாக்கி மர்மஆசாமிகள் நகை பறிக்கும் சம்பவம் பதிவாகி இருந்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டிய மர்மஆசாமி முக கவசம் அணிந்தபடியும், பின்னால் அமர்ந்திருந்த ஆசாமி ஹெல்மெட் அணிந்தபடியும் இருந்தனர்.

இந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடிவருகின்றனர்.

ஆசிரியையை தாக்கி நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்