போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
நாகையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வெளிப்பாளையம்:
நாகை நகர போலீஸ் சரகத்திற்குட்பட்ட கோட்டை வாசல்படி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கீழ்வேளூர் தாலுகா காக்கழனி நுகத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 28) என்பவர் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆறுமுகம் விடுதியில் தங்கி படிக்கும் 5 மாணவர்களுக்கு இரவு நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று முன்தினம் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ஆறுமுகத்தை கைது செய்தனர்.